இலக்குகளை அடைய நினைக்கும் போது நாம் கவனிக்க தவறும் ஆனால் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள்

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இலக்குகள், லட்சியங்கள் இருக்கும். யாருடைய வாழ்க்கையிலும் தமது வாழ்க்கையில் நிர்ணயித்த இலக்குகளை அடைவதே குறியாக இருக்கும். இலக்குகள் நிர்ணயித்தல் என்பது வாழ்க்கையை திட்டமிடுதலில் மிக முக்கியமான ஒன்றாகும். இலக்குகள் இல்லாதவர்கள் மகிழ்ச்சியற்ற மனிதர்களாகவே இருக்க முடியும். அவர்களுக்கு வாழ்வின் போக்கை குறித்து பெரிய கவலை இல்லை அவர்களுக்கு. இலக்குகள் இல்லையென்றால் உள்ளார்ந்து இருக்கும் இருக்காது. புற ஊக்கஉவிப்பும் இருக்காது.

போகும் பாதை எங்கே எப்படி என்ற தெளிவு தமது இலக்குகளை வரையறுத்தவர்களுக்கு மட்டுமே இருக்கும். தாம் நிர்ணயித்த இடத்திற்கு செல்லும் அந்த உந்துதலும் இலக்கு தெளிவாக வரையறுத்து வைத்தவரிகளிடம் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில் எத்தனை தெளிவாக இலக்குகளை நிர்ணயித்து வைத்திருந்தாலும் அதை அடைவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சமாளிக்க எல்லோராலும் முடிவதில்லை. இலக்குகளை அடைய நிர்ணயித்ததை விட அதிக காலமெடுக்கும் போது ஏமாற்றத்தால் அடைய நினைத்த விஷயத்தை எட்டும் தூரத்தில் இருப்பது புரிந்து கொள்ள முடியாமல் பின் திரும்பியவர்கள் ஏராளம்.

எனக்கு இதை பற்றி பேசும் போது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் கண்ட ஒரு கார்ட்டூன் தான் நினைவுக்கு வருகிறது. வெற்றி என்பது வானளவு என்று வைத்து கொண்டால் மேகம் மூடிக் கொள்வது இயல்புதான். ஆனால் அந்த புரிதல் நம்மிடையே உள்ளதா என்று தான் நாம் நம்மையே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி. அந்த கார்டூனில் உள்ள நபர் வெற்றியை இலக்காக வைத்துக் கொண்டு ஏணியில் ஏறிக் கொண்டு இருப்பார். வெகு தூரம் ஏறுவார். வெகு காலம் பிடிக்கும். ஆனால் ஏறுவார். இடையில் மேகம் மறைக்கும். ஏற்கனவே களைத்து போன இவர் இனி அதிகம் என்னால் ஏற முடியாது என்று இறங்கிவிடுவார். ஆனால் உண்மையில் அந்த மேகம் தாண்டி ஓரிரு படிகட்டுக்கள் மட்டுமே அவருடைய நிர்ணயித்த இலக்கிற்கு இருக்கும். சட்டென்று சுத்தியல் வைத்து அடித்தாற்போல் கருத்தை சொல்லும் இந்த கார்ட்டூன் சொல்லும் இரண்டு முக்கிய கருத்துகளை காண்போம்

1. இலக்குகளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற முழு நம்பிக்கை வேண்டும்

இலக்குகள் நிர்ணயித்தும் அதில் வெற்றி காணமுடியாதவர்களுக்கு உண்மையான காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும். “நான் நம்பிக்கையுடன் தானே செயலாற்றினேன்“, என்று நீங்கள் சொல்லக்கூடும். ஆனால் மீண்டும் சிந்தியுங்கள். யோசித்துப் பாருங்கள். நீங்கள் அடைய விரும்பியது ஒரு பெரிய செல்வந்தருக்கான நிலையாய் இருக்கலாம், ஒரு புத்தகம் எழுதி பிரசுரிப்பதாக இருக்கலாம், ஒரு பெரிய திரைக்கலைஞனாக ஆக வேண்டும் என்ற ஆசையாய் இருக்கலாம்; எதுவாக இருந்தாலும் நம்பிக்கை என்ற அடிப்படை தகர்ந்து போய்விட்டால் எல்லாமே ஆட்டம் கண்டுவிடும். வெற்றியை எட்ட இன்னும் கொஞ்ச தூரமே இருக்கலாம், ஆனால் நம்பிக்கையின்மை எனும் செயல் இத்தனை கால பிரயத்தனங்களையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடும். இத்தனை காலம் நீங்கள் நம்பிக்கையுடன் தான் செயலாற்றி இருப்பீர்கள். இத்தனைக் காலம் எப்படியும் இலக்கை அடைந்து விடுவேன் என்று நம்பிதான் இருந்திருப்பீர்கள். ஆனால் ஏதோ ஒரு மேகக் கூட்டம் உங்களை திசை திருப்பி விட்டதா? உங்கள் நம்பிக்கையை வலுவிழக்க வைத்துவிட்டதா? என்று யோசித்து பாருங்கள்.

2. சிறிது நேரம் எடுக்கத்தான் செய்யும் என்பதை புரிந்து கொள்வோம்

நம்முடைய பலவீனமே எல்லாம் நமக்கு உடனடியாக நடைபெற வேண்டும், நாம் நினைத்தவண்ணமே நடக்க வேண்டும் என்று நினைப்பதுதான். விதையை போட்டுவிட்டு, அது வளர்கிறதா, வளர்கிறதா என்று தோண்டி பார்த்துக் கொண்டே இருக்கும் கூட்டத்தை சேர்ந்தவர் நாம். ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு சுழற்சி நேரம் என்பது உண்டு. ஒரு விதை விருக்‌ஷமாக வேண்டும் என்றால் அதற்கான காலக்கெடு ஒன்று உண்டு. அதற்கு முன்னால் அதனிடமிருந்து பலன் எதிர்பார்ப்பது முட்டாள்தனமே. ஆனால் அந்த காலக்கெடுவின் பொழுது நம் இலக்குகளுக்கான ஏதோ ஒன்று நேர்மறையாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் இந்த அவகாசத்தையும் புரிந்து கொண்டால், இலக்குகளை நோக்கி நாம் சரியாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிய வந்தால், சிறிது காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் இலக்கை அடைவது நிச்சயம்.

Add Comment