பணமும் மனமும் – ஏ.வி.ஆரின் ஆத்ம விசாரணை பக்கங்கள்

இந்த பகுதியில் வருவன யாவும், என் ஆத்மவிசாரணை வலைப்பக்கத்தில் நான் எழுத தட்டச்சு செய்யப்பட்டு வைக்கப்பட்டவை. சில நான் அதில் பதிவேற்றம் செய்தும் இருக்கிறேன். 2012ல் எழுதத் தொடங்கி சில பல காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டது. இன்று மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறேன்… பிரபஞ்சத்தின் துணையோடு இதன் தொகுப்பு புத்தகமாக வெளியிடப்படும்.

அதிகாலைப் பொழுதின் பனிநீர்த்துளிகள் புல்லின் மீது படர்ந்திருந்தது. புற்கள் எப்பொதும் பசுமையாக இருப்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. என்றும் மண்ணோடு இணைந்திருக்கிறது. காற்றோடு உறவாடுகிறது. மனிதர்களை போல அல்ல அவைகள். எத்தனை மிதிப்பட்டாலும் தாங்கி கொண்டு என்றும் பசுமையாகவே காட்சியளிக்கின்றன. தாவர இனங்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது. அவற்றின் அந்த இயற்கை தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலேயொழிய அவை பசுமையாகவே காட்சியளிக்கின்றன. காற்றின் குளுமை மனதிற்கு இனிதாக இருந்தது. அப்போது தான் அந்த நண்பர் தனது கேள்வியை கேட்டார்

நண்பர்: அண்ணா, மனிதன் பணம் என்னும் விஷயத்தில் அடிபட்டு போய்விடுகிறானே. எதனால் என்று நினைக்கிறீர்கள். பணம் என்பது கண்டுபிடிக்கப் படாமலே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

ஏ.வி.ஆர்: ஏன் அப்படி சொல்கிறீர்கள்? பணத்தின் மீது உங்களுக்கு என்ன அப்படி ஒரு வெறுப்பு?

நண்பர்: வாழ்க்கை வாழ்வதே பணத்துக்காகத் தான் என்று சொல்கிறார்கள். நன்றாக வாழ வேண்டும் என்றால் பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்கிறார்கள். அப்போது பணம் சம்பாதிக்க முடியாதவர்கள் வாழத் தெரியாதவர்களா?

ஏ.வி.ஆர்: இப்போது நீங்கள் பணம் சம்பாதிக்கும் கூட்டமா, இல்லை அது இல்லாமல் வாழ முடியும் என்று தர்க்கம் செய்யும் கூட்டமா?

அவர்: பணம் வாழ்க்கைக்கு தேவைதான். ஆனால் இன்று உறவுகளின் விரிசல்களுக்கு அதுவே காரணமாக இருக்கிறது என்பதுதான் என்னுடைய வாதம். அதை கண்டு பிடிக்காமலேயே இருந்திருந்தால் மனிதர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் அல்லவா?

ஏ.வி.ஆர்: சரியாக சொன்னீர்கள். பணம் இன்றைய வாழ்க்கைக்கு அத்தியவசியமாகிவிட்டது. நண்பரே. பணம் என்பது ஒரு கருவி. மனிதனை சந்தோஷப்படுத்தும் விஷயங்களை அதே நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது தான் அது. மனிதனின் பொருள் தேடும் குணம் இன்று நேற்று இல்லை எத்தனையோ நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. பணம் கண்டுபிடிக்கப்பட்டதால் மட்டுமே அவன் சந்தோஷத்தை இழந்து விடவில்லை. பணம் இல்லையென்றால் அவன் பற்று மாற்று பெறாத தங்கத்தின் மீது இருக்கும். ஏதோ ஒன்று தோண்டும் போது அவனுக்கு தங்கமும், வைரமும், வைடூரியமும் கிடைத்ததே. அதை சொந்தம் கொண்டாட நினைத்தானே. மேலும் மற்ற மனிதர்கள் மேல் ஒரே ஒருவனது ஆளுமை குணம் அந்த கிடைத்த பொருள்கள் எல்லாம் தமக்கே என்று அடக்கி ஆள வைத்ததே.

அவர்: இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்லுங்கள்

ஏ.வி.ஆர்: அதாவது தங்கம் எதனால் இத்தனை மதிப்பு பெற்றது? அது மண்ணில் கிடைக்கும் ஒர் பொருள்தானே. மண்ணுக்குள் மக்கிய மரங்களும் அதுவும் இதுவும் சேர்ந்து தானே தங்கம் என்ற கனிமத்தை உண்டு பண்ணுகிறது. இயற்கையில் கிடைக்கும் இந்த பொருளுக்கு ஏன் இத்தனை கிராக்கி?

அவர்: அது எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை

ஏ.வி.ஆர்:  ஓ, அப்போது எல்லா இடத்திலும் கிடைப்பதை மதிக்க மாட்டீர்கள் அப்படித்தானே? சரி உங்கள் வாதத்திற்கே வருவோம். தண்ணீர் எல்லா இடத்திலும் கிடைக்கிறது. அது சல்லீசாக எங்கும் இலவசமாக கிடைக்கிறது என்பதனால் அதை நாம் பொருட்படுத்தாமல் இருக்கிறோம். அல்லவா? சரி என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். தண்ணீர் இல்லாமல் வாழ முடியுமா அல்லது தங்கம் இல்லாமல் வாழ முடியுமா?

அவர்: தங்கம் இல்லாமல் வாழ முடியும்.

ஏ.வி.ஆர்: பிறகு ஏன் தண்ணீருக்கு மதிப்பு குறைவு, தங்கத்துக்கு மதிப்பு அதிகம்?

அவர்: தெரியவில்லை அண்ணா. நீங்களே சொல்லுங்கள்

ஏ.வி.ஆர்: ஒரு கதை சொல்கிறேன். ஒரு குழுவாக கிளம்பி நாம் அனைவரும் ஒரு காட்டுக்கு செல்கிறோம். பாதை தவறி விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். கொண்டு வந்த உணவு மொத்தம் தீர்ந்து விடுகிறது. இப்போது அனைவருக்கும் கொலை பசி. அனைவரும் உணவு தேடி அலைகிறோம். பேர்தான் காடே தவிர எல்லாம் காசுக்கு பிரயோஜனம் இல்லாத மரங்கள். அதாவது நம் பசியின் நிலையை போக்க இயலாத காய் கனி இல்லாத மரங்கள். நெடு நேர தேடலுக்கு பிறகு குழுவில் இருக்கும் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு கனி மட்டும் கிடைத்து விடுகிறது. ஆனால் எல்லாருக்கும் பசி. என்ன செய்வோம் நாம். இருப்பதோ ஒரு பழம்.

அவர்: கிடைத்தவன். அவனே தின்ன பார்ப்பான்.

ஏ.வி.ஆர்: ஆமாம். ஏன் அவனுக்கு கிடைத்ததை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை?

அவர்: எல்லாரும் சுயநலம் மிகுந்தவர்கள் தானே அண்ணா?

ஏ.வி.ஆர்: மிகச் சரி. அதற்கு நீங்களும் நானும் விலக்கில்லை. அதே கூட்டத்தில் ஒரு வலிமையானவன், மூர்க்கனும் இருக்கிறான் என்றால் என்ன செய்வான்?

அவர்: சண்டை போடுவான்.

ஏ.வி.ஆர்: ஆம் நண்பரே. தங்கமும் அதே போல் தான். உலகின் ஏதோ சில விழுக்காடு பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. பொருள் பசி படைத்த மனிதனோ அது தனக்கே சொந்தம் என்று சண்டை போடுகிறான். எங்கும் கிடைக்கும் தண்ணீரை அவன் மதிப்பதேயில்லை. ஆளுமை குணம் உள்ளவன், வலிமையானவன் எளிமையானவன் கையில் இருந்து அதனை பிடுங்கி கொள்கிறான். தான் வைத்திருக்கும் பொக்கிஷம் எங்கே களவு போய்விடுமோ என்ற பயம் அவனுக்கு. ஆனால் உண்மையில் எது இல்லாமல் வாழ்க்கை சாத்தியம் இல்லையோ அது தான் உண்மையில் பொக்கிஷம் அல்லவா? அந்த பொக்கிஷத்தை இனம் கண்டு கொள்வதில் அவன் குழம்பி போகிறான். இனம் கண்டு கொள்ளாமல் போவதற்கு அவன் மனம் மட்டுமே காரணம். அல்லவா? ஒரு வேளை கிடைத்த தங்கம், மற்றும் அனைத்து விஷயங்களையும் அவன் பகிர்ந்து கொண்டிருந்தானேயானால், இப்போது இந்த பிரச்சினை வந்து இருக்காது. ஆனால் எனக்கும் தங்கத்தின் மீது ஆசை, உங்களுக்கும் ஆசை, எல்லாருக்கும் ஆசை. என்ன செய்வது?

ஒரு காலத்தில் நாகரீக வளர்ச்சியின் பாகமாக வலிமையானவன் ஒருவன் மனிதர்களின் கூட்டத்தை தலைமை தாங்கினான். தான் வழி நடத்தி வரும் கூட்டத்திற்கு பொறுப்பேற்றான். இப்படித்தான் அரசர்கள் உருவானார்கள். அரசு உருவானது. தேசிய எல்லைகள் உருவானது. ஆனால் அந்த குழுக்கள் உருவாகும் வரை மனிதன் வேறு ஏதோ ஒன்றுக்கு சண்டை போட்டு கொண்டுதான் இருந்தான். எல்லைகள் வரையறுக்கப் பட்டபின் மனித மனம் இறுக ஆரம்பித்தது. எல்லாம் தனக்கே என்று சொந்தம் கொண்டாட ஆரம்பித்தான். எல்லைகளின் இறுக்கம் போலும் அவனுக்கு மனத்தை உறுத்திக் கொண்டுதான் இருந்தது. மற்றவனை விட பெரியவன் என்று தன்னை தானே காட்டி கொள்வதில் அவன் கர்வம் கொண்டிருந்தான். எனவே எல்லைகளை விரிவாக்கும் செயலான போர்கள் முளைத்தன. தன் எல்லைக்குள் இருந்ததை அடுத்த எல்லைக்குல் இருப்பவர்களுக்கு கொடுக்க விதிமுறைகள் வைத்தான். அடுத்த எல்லைக்குள் தனக்கு வேண்டுமென்பதை பெற பண்டமாற்று முறை வைத்தான். இவை அனைத்தையும் கொஞ்சம் உற்று கவனித்தீர்களேயானால் ஒரு உண்மை புரியும். அனைத்தும் மனிதனின் தேவைகளுக்காக மட்டும் உருவாக்க படவில்லை. மாறாக அவனின் ஆசைகளுக்காக உருவாக்கப்பட்டது. தேவைகளுக்காக என்றால் இயற்கையாக கிடைக்கும் எந்த பொருளும் அவனது தேவைகளை பூர்த்தி செய்யும். ஆனால் இன்னொருவன் வைத்து இருப்பது தான் வைத்திருப்பதை விட சிறந்ததோ என்ற பயம் அவனை எப்போதும் ஆட்கொண்டிருந்தது.

நீங்கள் கூட கேட்டிருப்பீர்கள், “தேவையே கண்டுபிடிப்பின் அடிப்படை”, என்று. ஆனால் உண்மையில், “ஆசையே தேவையின் அடிப்படை”.

எங்கும் கிடைக்கும் தண்ணீரின் மீது அவனுக்கு ஆசை இல்லை. ஆனால் எங்கோ கிடைக்கும் தங்கத்தின் மீது அவனுக்கு ஆசை. அதை கவர நினைக்கிறான். தனக்கே என்று பூட்டி வைக்க நினைக்கிறான். நான் சொல்லும் இந்த விஷயங்களை கவனிக்கிறீர்கள் தானே?

அவர்: ஆம் அண்ணா. கவனித்து கொண்டுதான் இருக்கிறேன். அப்படியென்றால் பணம் ஆசையின் அடிப்படையில் உருவானது என்று சொல்கிறீர்களா?

ஏ.வி.ஆர். : பொறுங்கள். நான் சொல்கிறேன். அவசரப் படவேண்டாம். இன்னொருவன் பூட்டி வைப்பதை மற்றொருவன், “எதற்கோ இவன் பூட்டி வைக்கிறானே, அது ஏதோ சிறந்த பொருளாகத்தான் இருக்கும்”, என்று நினைக்கிறான். இப்படி சங்கிலி தொடர்கிறது. உண்மையில் வாழ்க்கைக்கு தேவையே இல்லாத ஒரு பொருளை, அது தேவை என்கிற ஆசை, உண்மையான ஒரு தேவை ஆக்கி விடுகிறது. அதைத் தேடி அலைய ஆரம்பித்து விடுகிறான். இங்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஆசை, தேவை, சுயமதிப்பீடு, மற்றவர்களுடன் ஒப்பீடு, என்று மனித மனம் கட்டுக்கடங்காமல் போகிறது. இவனது இந்த காரணிகளை வணிகமாக்கி கொண்டதுதான் நாணயம் – பணம் உருவாகக் காரணம். பண்டமுள்ளவன் பண்டத்தை மாற்றிக் கொள்வான். இல்லாதவன் என்ன செய்வான்?

ஒரு வேளை பணம் என்பது உருவாக்கப் படவில்லை என்றால். மனிதனின் நாட்டம் வேறு ஏதொ ஒன்றின் மேலிருக்கும். ஏனென்றால் குறை பணம் என்ற பொருளின் மீது இல்லை. மனிதனின் மனம் என்ற பொருளின் மீது இருக்கிறது.

எனக்கு ஆல்ப்ஸ் மலை சிகரங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அங்கு செல்ல வேண்டும் என்றால், கப்பலில் பயணிக்க வேண்டும். இல்லையென்றால் விமானம் வேண்டும். விமானம் ஓட வேண்டும் என்றால் எரிபொருள் வேண்டும். எரிபொருள் ஒரு சில இடங்களைத் தவிர பூமியின் வேறு பகுதிகளில் கிடைப்பது கிடையாது. அப்போது அதை நாம் அங்கிருந்துதான் பெற வேண்டும். எரிபொருள் கிடைக்கும் பகுதிகளில் இருப்பவனுக்கு வேறு ஏதோ ஒரு தேவை இருக்கிறது. அதனால் அவன் அதை மாற்றுகிறான். அந்த மாற்றத்திற்கு உதவுவதுதான் பணம். இது பரிணாம வளர்ச்சியும், நாகரீக வளர்ச்சியும் இணைந்து செய்த வேலை. எரிபொருளுக்காக விமானம் வைத்திருப்பவன் செலவு செய்யும் ஏதோ ஒன்றை என்னை போல பயணியிடம் இருந்து தானே ஈடு செய்ய முடியும். அப்போது யோசிக்கிறான். சிறிது கூடுதல் ஈடு செய்வோம் என்று. இப்போது மனிதனின் மனம் ”லாபம்” என்ற நோக்கோடு செயல் படுகிறது. நீங்கள் சொன்னது போல் சுயநலவாதிகளான நாம் ஆதாயம் ஈட்ட பார்க்கிறோம். என்னுடைய ஆல்ப்ஸ் மலை பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னிடம் இருக்கும் பொருளை இன்னொருவனுக்கு கொடுக்கும்படி செய்கிறது. இங்கு என்னுடைய ஆசை நிறைவேறுகிறது. ஆனால் ஆசை நிறைவேற்ற முடியாமல் போகிறவன் என்ன செய்வான்? ஆல்ப்ஸ் மலை எங்கும் இல்லையே?

அவர்: புரிகிறது அண்ணா?

ஏ.வி.ஆர்: சில நேரங்களில் நம்முடைய ஆசைகள் நம்முடைய அடிப்படை தேவையை மையமாக வைத்தே அமைகிறது. ஆனால் அது ஒரு படி மேலே போகும் போது அதை பூர்த்தி செய்ய பணத்தை எதிர்பர்க்கிறோம். எல்லோருக்கும் ஆசைகள் அடிப்படையை தாண்டி மட்டுமே இருக்கிறது. எனவே பொருளை தேடி அலைய ஆரம்பிக்கிறோம்.

வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் எல்லா மனிதர்களிடத்தில் இருந்தும் கிடைக்க கூடிய பொருள் ஒன்று இருக்கிறது. நம் எல்லாரையும் வாழ வைக்கும் பிணைப்பு அது. “அன்பு” என்று நாம் அதற்கு பெயரிட்டு இருக்கிறோம். எங்கும் கிடைக்கும் அது. தண்ணீரை போன்றது. அதனால் தான் எங்கும் கிடைப்பதால் அதை நாம் கவனிப்பதே இல்லை. மனிதன் எங்கோ கிடைக்கும் ஒரு பொருளை பொக்கிஷம் என்று நினைக்க கூடியவன் என்று ஏற்கனவே பார்த்தோம். அதனால்தான் எங்கும் கிடைக்கும் அன்புதான் தன் வாழ்க்கைக்கு பிரதானம் என்று தெரியாமல் எங்கோ கிடைக்கும் விஷயங்களுக்காக தன் வாழ்க்கையை செலவு செய்ய முனைகிறான். மற்றவர்களையும் தூண்டுகிறான். தன்னை தானே சுயமதிப்பீடு செய்து, மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன்னை தானே குறைத்து மதிப்பிட்டு கொண்டு இன்னும் வேண்டும் என்று பற்றாக்குறை எண்ணத்தோடு வாழ்கிறான்.

அவர்: அந்த எண்ணம் தான் அவனை மேலும் மேலும் பணத்துக்காக ஓட சொல்கிறது. ஓடாதவனை அவன் வைத்திருக்கும் அந்த மதிப்பீடுகள் ஏளனம் செய்கின்றன.

ஏ.வி.ஆர்: சரியாக சொன்னீர்கள். நண்பரே. பரிணாம வளர்ச்சியின் காரணமாகவும், நாகரீக வளர்ச்சியின் காரணமாகவும் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையின் சாரத்தில் பணம் நுழைக்கப்பட்டு விட்டது. இனி அது வேண்டுமா, வேண்டாமா என்ற வாதத்திற்கு இடமே இல்லை. எங்கும் கிடைக்கும் தண்ணீரை இன்று குப்பிகளில் அடைத்து அதற்கும் பணம் கேட்கிறார்கள். கேட்டால் சுத்தமான தண்ணீர் என்கிறார்கள். அது மழை நீரை விட சுத்தமானதா என்ன? இப்போது நான் கேள்விபட்டேன் மன உளைச்சலில் இருப்பவர்களை ஆசுவாசப் படுத்த அமெரிக்காவில் சில பெண்கள் “கட்டிப்பிடி” வைத்தியம் செய்கிறார்கள் என்று. அதாவது சிறிது நேரம் கட்டிப் பிடித்து, தழுவினால், மனம் சுறுசுறுப்பு அடைகிறதாம். அதற்கு பணம் வசூலிக்கிறார்களாம். இன்னும் சிறிது காலம் போனால் எங்கும் கிடைக்கும் அன்பை, “தூய அன்பு கிடைக்கும்” என்று பலகை மாட்டி வியாபாரம் செய்வார்கள். அப்போதும் அது இறைஅன்பு, தாய் அன்பு போன்ற விஷயங்களுக்கு ஈடாகாது. எனினும் அது நடக்க வாய்ப்புள்ளது.

சுருக்கமாக சொல்லப்போனால் மனிதனின் ஆசைகளின் அடிப்படையில் உருவாகும் தேவைகள் இருக்கும் வரை அவனுக்கு பணம் தேவைப் படும். நல்ல புத்தகங்கள் வாங்க எனக்கு பணம் தேவைப்படுகிறதே. ஆனால் அது எந்த மட்டும் என்று கேள்வி எழுப்பினால்,

” வாழ்க்கைக்கு பணம் தேவை, ஆனால் பணத்திற்காக வாழ்க்கை இல்லை” என்ற அடிப்படை உண்மையை மனிதன் புரிந்து கொள்ளும் வரை என்றே நான் சொல்லுவேன்.

ஆனால் ஒப்பிடுகளின் அடிப்படையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை அதற்கு இடம் தருமா என்பது சந்தேகமே.

Add Comment