மனத்தோற்றங்களால் உறவுகளில் சிக்கல்களே அதிகம் – ஜெ.கிருஷ்ணமூர்த்தியுடன் “வாழ்க்கை”

இந்த பதிவு 2014ம் ஆண்டு Living with J Krishnamurti என்று பதிவு செய்த எமது வ்லைத்தளத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அன்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின்னர் பொருளாதார நில காரணமாக கைவிடப்பட்ட அந்த வலைதளக் கட்டுரைகள் ஒவ்வொன்றாக இங்கு இடம்பெற இருக்கின்றன.

என் வாழ்க்கையில்  உறவுமுறை சிக்கல்களை நான் பார்த்திருக்கிறேன். உறவுகள் என்றவுடன் அதன் கட்டுப்பாடுகளும், கட்டுபடுத்தும் தன்மையும் தான் என் மனதிற்கு வருபவை. உறவுகளில் எல்லைக்கோடுகள் உள்ளதென்று சமீபத்தில் நான் இயற்றிய காணொளியில் கூறியிருந்தேன். அது என்னுடைய கருத்து மட்டும் அல்ல, மகாபாரதம் ராமாயணம் போன்றவற்றில் இருந்து மேற்கோள்கள் காட்டி அந்த புத்தகத்தின் ஆசிரியர் உறவுகளில் உள்ள சிக்கல்கள் அதன் எல்லைக் கோடுகள் பற்றி பேசியிருப்பார்.

இந்த உறவுமுறை சிக்கல்கள் பற்றி யோசித்தால் எப்போதும் எனக்கு ஜெ.கிருஷ்ணமூர்த்தி தான் முதலில் கண்முன் வந்து போவார். அவர் பேசிய உறவுமுறை குடும்பங்களை தாண்டியது. மொத்த மனிதத்திற்கானது. அதன் ஆழமான புரிதல் நமக்கு வாழ்க்கையின் மேன்மையை இன்னும் ஆழமாக உணர்த்தும். உறவுகளைப் பற்றி அவர் கூறுகையில்

மனிதன், தன்னுள்ளும் வெளியிலும் தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டு வாழ்வது, சோகமான விஷயம் என்று தோன்றுகிறது. இந்த முரண்பாடுகள் மனிதனிடமிருந்து பல வழிகளில் வெளிப்படுகின்றன. அதாவது இரு மனிதர்களுக்கிடையே போராட்டம், இருவேறு கடவுள்கள் மற்றும் குருமார்களுக்கிடையேயான போராட்டம் என மனிதனின் இந்த தொடர் போராட்டமானது பேரழிவிற்கே இட்டு செல்கிறது. இவ்வாறான வாழ்வானது நல்லவை படைக்கும் படைப்பாற்றல் மிக்க வாழ்க்கையே அல்ல, மாறாக, சக்தியை விரயமாக்கவே செய்கிறது.

உங்களால் இப்பிரச்சினைகளை ஒரு போதும் தீர்க்க முடியவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. உறவுகளிலுள்ள முரண்பாடு என்பது உண்மையில் இரு வெவ்வேறு மனத்தோற்றங்களுக்கு இடையே உள்ளதாகும். நீங்கள், உருவாக்கிக் கொண்ட மற்றவரைப் பற்றிய மனத் தோற்றம்., மற்றவர் உங்களைப் பற்றிய மனத்தோற்றம் என இந்த இரு மனத்தோற்றங்கள் தான் உறவுகளிலுள்ள போராட்டங்களுக்கு முக்கிய காரணம்.

இந்த மனத்தோற்றம், மனப்பிம்பம் மற்றும் உங்கள் அனுபவங்களில் இருந்து உண்டான முடிவுகள் போன்றவை இல்லாமல் உங்களால் வாழமுடியுமா? உண்மையில், இது சாத்தியமாகும் என்றே நினைக்கிறேன். ஒரு சிறிய முரண்பாடு கூட இல்லாமல் வாழ்வது சாத்தியம் தான். அவ்வாறு வாழ வேண்டுமெனில், உங்களை பற்றிய மனத்தோற்றம் ஏதும் இல்லாமல் இருத்தல் வேண்டும்”,

எவ்வளவு ஆழமான அர்த்தம் பொதிந்த வாசகங்கள். என் வாழ்வில் இதை புரிந்து கொண்ட போது, எத்தனை முட்டாளாக இது வரை இருந்திருக்கிறேன் என்பது மட்டுமே ஏமாற்றமாக மிஞ்சி இருந்தது. ஆனால் இந்த அற்புதமான புரிதல் பல மாற்றங்களை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. பிரிந்த உறவுகளின் மறு சீரமைப்பாகட்டும், மனதில் பழைய நிகழ்வுகளால் ஏற்பட்ட அபிப்ராயவித்தியாசங்களாகட்டும், அபிப்ப்ராயங்களால் ஏற்பட்ட முன்விதிகளாகட்டும், எது எல்லாம் இந்த மனத்தோற்றம் எனும் மாயபிம்பம் ஏற்படுத்துகிறது என்று என்னால் அடையாளம் காண முடிந்தது. இந்த உணர்தல் ஒவ்வொருவருக்கும் தேவை, மனம் ஏற்படுத்தும் மாயபிம்பங்கள் குறிப்பாக உறவுகளில் தகர்க்கப்படுமேயானால், உறவுகளில் மேன்மை நிச்சயம்.

கிருஷ்ணமூர்த்தி, “உண்மையில் இது சாத்தியமாகும் என்றே நான் நினைக்கிறேன். ஒரு சிறைய முரண்பாடு கூட இல்லாமல் வாழ்வது சாத்தியமே,” என்று கூறியதன் உண்மை புலப்படுகிறது மனதில். அவரே தொடர்கிறார், “உங்களைப் பற்றியோ, மற்றவரை பற்றியோ உயர்வாகவோ, தாழ்வாகவோ, உன்னதமானவராகவோ, உன்னதமற்றவராகவோ என்று எவ்வித மனத்தோற்றமும் இல்லாமலிருந்தாலே அது சாத்தியமாகும்”.

வாழ்வின் நிதர்சனத்தோடு வாழ தொடங்கும் போது, மனம் ஏற்படுத்தும் பிம்பங்கள் தகர்ந்து போகும் அல்லவா?

இந்த சிந்தனையை உரக்க சொல்லும் எனது சமீபத்திய காணொளி:

Add Comment